சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் புகழ்பெற்றவை. ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது வாடிவாசல்களில் காளைகளை அவிழ்ப்பதையும், அவற்றை வீரர்கள் அடக்குவதையும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பெருமையாக கருதுகின்றனர்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் போட்டிகள் நடைபெறும். அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, திருச்சி போன்ற தென்மாவட்டங்களில் காளை உரிமையாளர்கள் தங்கள் காளைகளைத் தயார்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை எங்கும் நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வடமாடு, மஞ்சு விரட்டு, எருது விடும் நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


