மஞ்சள், சிவப்பு நிற பொருட்கள் கொண்டு வரக்கூடாது – ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் கடும் நிபந்தனைகள்..!!!
கோலாலம்பூர்: மலேசியாவில் நடைபெறும் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை பிரதிபலிக்கும் பொருட்களை கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக கொடியில் இருக்கும் வண்ணங்களை பிரதிபலிக்கும் பொருட்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இது விஜய்யின் கடைசி படம். மேலும், முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்தி விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கான படமாகவே எடுக்கப்பட்டுள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் ஜனநாயகன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது
இந்த நிலையில் தான் ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த முறை சென்னையில் இசை வெளியீட்டு விழா நடக்கவில்லை. மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புகீத் ஜலில் மைதானத்தில் இசை வெளியீடு நடைபெற இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு மலேசியா அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மலேசியா காவல்துறையினர், முன்னெச்சரிக்கையாக பல விதமான நிபந்தனைகளை படக்குழுவினருக்கு போட்டுள்ளனர். அரசியல் தொடர்பாக பேசக்கூடாது என விஜய்க்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவை ஜன நாயகன் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவாக மட்டுமே நடத்த வேண்டும். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சிக்கான மேடையாக பயன்படுத்தக் கூடாது. கட்சிக் கொடியை பயன்படுத்தவும் கூடாது. அரசியல் வசனங்கள், உரை என்று எதுவும் இடம் பெறக் கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாயகன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அரசியல் சார்பாக எந்த ஒரு அம்சமும் இடம்பெறக் கூடாது, அப்படி இடம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசிய காவல்துறை எச்சரித்துள்ளது. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா ஒரு பொழுதுபோக்கு நிகழ்வாக மட்டுமே நடத்தப்பட வேண்டும், இந்நிகழ்வை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதி இல்லை என படக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். மேலும், இசை வெளியீட்டு விழா மேடையில் அரசியல் கருத்துகளை பேசக் கூடாது, அரசியலைக் குறிப்பிடும் பேனர்கள், பொருட்கள், சின்னங்களை பயன்படுத்தக் கூடாது. பொது அமைதியையும் அனைத்து கட்டுப்பாடுகளையும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்போர் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இந்நிலையில், ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை பிரதிபலிக்கும் பொருள்களை கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தவெக கொடியில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் இடம்பெற்று நிலையில், அந்த நிறத்தை பிரதிபலிக்கும் பொருட்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


