Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

புதிய அறிவிப்புகள் வருமா? பிப்ரவரி 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்!

0

2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் புத்தாண்டுக்குப் பிறகு முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இந்த மரபுப்படி, சட்டசபை அனேகமாக ஜனவரி 5 ஆம் தேதி கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தின் முதல் நாளில், கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், சுமார் மூன்று நாட்கள் வரை நடைபெறும்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், வழக்கமான முழு நிதிநிலை அறிக்கைக்குப் பதிலாக, அதற்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட் (Interim Budget) மட்டுமே தாக்கல் செய்ய முடியும். மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தமிழக சட்டசபையில் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறும் கட்சி, புதிய நிதிநிலை அறிக்கையை (முழுமையான பட்ஜெட்) ஜூன் மாதம் முழுமையாக தாக்கல் செய்யும்.

இந்த இடைக்கால பட்ஜெட் தேர்தலுக்குச் சற்று முன்னதாக தாக்கல் செய்யப்படுவதால், இதில் புதிய கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மற்றும் நலத்திட்டங்கள் வெளியாவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இடைக்கால பட்ஜெட்டைத் தொடர்ந்து, அடுத்த நாளே வேளாண் பட்ஜெட்டும் இடைக்காலமாகத் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. எனினும், ஒருவேளை இடைக்கால வேளாண் பட்ஜெட்டும் பொது பட்ஜெட்டுடன் சேர்த்தே தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதன் மீதான பொது விவாதம் சுமார் நான்கு நாட்கள் வரை நடைபெறலாம். பிப்ரவரி மாதத்தின் இறுதியில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், அதற்கு முன்னதாகவே இடைக்கால பட்ஜெட் தாக்கல் உட்பட அனைத்து சட்டமன்ற நிகழ்வுகளும் நிறைவு செய்யப்பட்டுவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.