சென்னை: புதுச்சேரியில் நாளை பொதுக் கூட்டம் நடத்தவிருந்த நிலையில் விஜய்யின் பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலில் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்கப்பட்டு அதை கிடைக்கவில்லை. பொதுக் கூட்டம் நடத்தவே அனுமதி கொடுக்கப்பட்டது.
புதுவையில் டிசம்பர் 5ஆம் தேதியான நாளை ரோடு ஷோ நடத்த தவெக தலைவர் விஜய் முடிவு செய்திருந்தார். காலாப்பட்டில் தொடங்கி கன்னியக்கோவில் வரை ரோடு ஷோ நடத்தவும், சோனாம்பாளையம் தண்ணீர் தொட்டி அருகே மைக்கில் பேசவும் 3 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி டிஐஜி அலுவலகத்தில் தவெகவினர் மனு அளித்தனர்.
முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அனுமதி தருமாறு அவர்கள் கேட்டிருந்தனர். அனுமதி கோரி, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் 4 முறை கடிதம் அளித்திருந்தனர். இந்த நிலையில் புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை என டிஐஜி சத்தியசுந்தரம் தெரிவித்துள்ளார். வேண்டுமானால் திறந்தவெளி இடத்தில் பொதுக் கூட்டம் நடத்தி கொள்ளலாம் என தெரிவித்திருந்தார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் ரோடு ஷோ நடத்த காவல் துறை அனுமதி மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கேட்ட போதும் அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் தரப்பு புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டது. இதற்கு அனுமதி கிடைத்துவிட்டது.
இந்த சம்பவங்கள் எல்லாம் நேற்று முன் தினம் நடந்தது. எனவே பொதுக் கூட்டம் நடத்த டிசம்பர் 3, 4 ஆகிய இரு நாட்கள் மட்டுமே இருந்ததால் அதற்கான ஏற்பாடுகளை எப்படி செய்வது என தவெக தரப்பு யோசனை செய்தது. இந்த நிலையில் நாளை புதுவைக்கு விஜய் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே புதுவை முதல்வர் ரங்கசாமியுடன் நெருக்கம் காட்டி வந்தார். இதனால் புதுவையில் ரங்கசாமி கட்சியுடன் விஜய் களமிறங்குவார் என பேசப்பட்டது. இந்த நிலையில்தான் ரோடு ஷோவிற்கு அனுமதி கேட்டும் கிடைக்காததால் புதுவை புஸ்ஸி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆனந்த் நேரில் போய் பேசியும் ஒன்றும் நடக்கவில்லை


